சாதனைகளே இல்லாத சோதனைகள் நிறைந்த வேதனையான நிதிநிலை அறிக்கை – ஓபிஎஸ்

Default Image

தமிழ்நாட்டின் நிதிநிலைமையை நன்கு அறிந்திருந்தும், ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக திமுக பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.

அந்த அறிக்கையில், ‘விடியலை நோக்கி’ என்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மாதம் ஒரு முறை மின் கட்டணம், முதியோர் உதவித் தொகை ரூ.1,500ஆக அதிகரிப்பு, கல்விக் கடன் ரத்து, நகைக் கடன் ரத்து, மகளிருக்கு மாதம் ரூ.1,000, 60 வயதிற்கு மேற்பட்டோரின் உதவித் தொகை ரூ.1500 உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக அரசின் முதல் நிதி நிலை அறிக்கை ‘விரக்தியை நோக்கி’ மக்களை அழைத்துச் சென்றிருக்கிறது.

நிதி அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையையும், திமுகவின் தேர்தல் அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வாக்களித்த மக்களை திமுக வஞ்சித்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது. இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நன்கு அறிந்திருந்தும், ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக திமுக பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்ததும், இந்த அறிக்கை மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன் ஒவ்வொன்றையும் விரிவாக பட்டியலிட்டு அதனை பிறமாநிலங்களுடன் ஒப்பிட்டு நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டதையும், இன்றைய திருத்திய நிதிநிலை அறிக்கையையும், ஒப்பிட்டுப் பார்த்தால், மாற்றத்திற்கான அறிகுறிகள் எதும் தெரியவில்லை. கனிமங்கள் மற்றும் சுரங்கங்களில் ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதைத் தவிர புதிதாக வருவாய் வருவதற்கான வழிமுறைகள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை.

அதிமுக அரசால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்த திருத்திய நிதிநிலை அறிக்கையில் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன், செலவு ஆகியவை அதிகரிக்கப்பட்டு வருவாய் குறைந்து இருக்கிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த நிதிநிலை அறிக்கை அமையவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சாதனைகளே இல்லாத சோதனைகள் நிறைந்த வேதனையான நிதிநிலை அறிக்கை என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்