ஆம்ஸ்ட்ராங் இடத்திற்கு புதிய நபர்.! கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியின் மாநில தலைவர் தலைநகர் பகுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் மறைவை தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்து தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, அக்கட்சியின் புதிய தலைவராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவராக இளமாறனும், பொருளாளராக கமலவேல் செல்வனும், நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் வழக்கறிஞர் ஆனந்தன் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2009இல் மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டவர் . கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்ட்ராங் உடன் இணைந்து பணியாற்றியவர்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதற்கட்டமாக பொன்னை பாலு, திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருந்தனர். இதில் திருவேங்கடம் கடந்த ஜூலை 14ஆம் தேதி காவல்துறையினரின் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ், அஞ்சலை என சில முன்னாள் அரசியல் பிரமுகர்களும் காவல்துறையால் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.