“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
2024 தேர்தலை விட 2026 தேர்தல் முக்கியம், தொகுதி நிதியை முறையாக செலவிட வேண்டும் என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டதோடர் தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் திங்கள் (நவம்பர் 25) முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்காக என்ன பேச வேண்டும் அவர்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” 2024 நாடாளுமன்ற தேர்தலை விட, 2026 சட்டமன்ற தேர்தல் மிக முக்கியம். திமுக எம்பிக்கள் தங்கள் தொகுதிக்காக ஒதுக்கப்படும் மேம்பாட்டு நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். மக்களவைத் தொகுதிக்குள் இருக்கும் சட்டப்பேரவை தொகுதிகளில் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை திமுக எம்பிக்கள் தங்களின் செயல்பாடு குறித்து கட்சிக்கு அறிக்கை தர வேண்டும்.” எனக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மூன்றாவது முறையாக ஜெயித்த பாஜக, முன்பு இருந்ததை போல பரபரப்பாக செயல்படவில்லை என்றாலும், தங்கள் கொள்கைகளை எப்படியாவது அமல்படுத்தி விட வேண்டும் என்று இருக்கிறார்கள் அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது. அதற்காக இந்தியா கூட்டணி உறுப்பினர்களோடு உறுதியாக துணை நிற்க வேண்டும்.
தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. ரூ.37,907 கோடி பேரிடர் நிவாரண நிதி கேட்கப்பட்டதற்கு ‘யானை பசிக்கு சோள பொறி’ போல் வெறும் ரூ.276 கோடி மட்டுமே மத்திய அரசு கொடுத்துள்ளது. வரிப்பகிர்வில் தமிழ்நாட்டை தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
பாஜக அரசின் பாசிச தன்மைக்கு எதிராகவும் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்தவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக கடமையில் உறுதியாக நிற்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் வக்பு வாரிய திருத்த சட்டம், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம், மாநிலங்களுக்கான அதிகாரத்தை அபகரிப்பது, நிதி ஒதுக்கீட்டில் பாஜக அல்லாத மாநில அரசுகளிடம் பாரபட்சம் காட்டுவது, ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் நிதி குறைப்பு, இளைஞர்களை திண்டாட வைக்கும் வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் குரல்கள் எழுப்ப வேண்டும்” என பல்வேறு விஷயங்கள் குறித்து திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.