ஒரே வீட்டில் அதிமுக – திமுக.. பரபரப்பான தேர்தல் களத்தில் கலகலப்பான நிமிடங்கள்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் பொன்முடி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் ஒரே வீட்டில் வாக்கு சேகரித்த கலகலப்பான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டே செல்கிறது. நாளையுடன் பிரச்சாரம் முடியவுள்ளதால் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு கட்சியினரை இன்னோர் கட்சியினர் தாக்கி பேசுவது, அதற்கு இவர்கள் பதிலுக்கு தாக்கி பேசுவது, கல்வீச்சு, தாக்குதல் என பரபரப்பாக இயங்கிய இந்த தேர்தல் களத்தில் நேற்று ஓர் கலகலப்பான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
அதாவது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு வீட்டில் வாக்கு சேகரித்த போது, அதே வீட்டுக்கு திமுக அமைச்சர் பொன்முடியும் வந்தார். இரு வேறு எதிரெதிர் கட்சியை சேர்ந்த இருவரும் ஒரே வீட்டில் சந்தித்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் பொன்முடியும், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் கலகலப்பாக ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அது அங்குள்ளவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.பரபரப்பான இடைத்தேர்தல் களத்தில் இம்மாதிரியாக நிகழ்வுகள் தொண்டர்களுக்கு புது உற்சாகத்தை தரும் என்றே கூறவேண்டும்.