தேனியில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை..! பொதுமக்கள் அவதி..!
சென்னையைத் தொடர்ந்து தேனியில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கனிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை ஒரு கிலோவிற்கு 100 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பெங்களூரில் தக்காளி விலை கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது.
தற்பொழுது, சென்னையைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.120 ஆக விற்பனை செய்யப்டுகிறது. தக்காளியை ஏற்றத்தை குறைக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 62 பண்ணை பசுமை நுகர்வோர் மையங்களில் தக்காளி விலை ரூ.60 க்கு விற்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர் பெரிய கருப்பன், இன்னும் 3 அல்லது 4 நாட்களில் தக்காளி விலை கட்டுப்படுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு வரும். அப்படியே இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் காய்கறிகளை விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.