உச்சநீதிமன்றத்தில் சரித்திர தீர்ப்பு வந்துள்ளது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு கொடுப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை என அண்ணாமலை கருத்து.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் ஆதரவாகவும், 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் தலைமை நீதிபதி உள்ளிட்ட இருவர் தீர்ப்பு வழங்கினர். பெரும்பான்மை நீதிபதிகள் சரி என்றதால் 10% இடஒதுக்கீடு உறுதியானது.
10% இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு உறுதி என்ற தீர்ப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், உச்சநீதிமன்றத்தில் சரித்திர தீர்ப்பு வந்துள்ளது. பிரதமர் மோடி கொண்டு வந்த இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை வரவேற்கிறோம். யாருக்கும் எங்கேயும் இதனால் பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பலருக்கு இது உதவும்.
இதனால் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு பற்றி சுப்ரீம் கோர்ட் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு அளித்துள்ளது என்றும் 10% இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து திமுக விஷமத்தனமாக பிரச்சாரம் செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.