ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சாதகமான அறிக்கையே கொடுக்கப்பட்டுள்ளது…!ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர்
அரசியல் காரணங்களுக்காகவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்று ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசனை வெளியிட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஐவர் குழுவை அமைத்து, 6 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்படும் இடங்களில் ஆய்வு செய்தனர். அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 30-ம் தேதி முடிவடைந்தநிலையில், வல்லுநர் குழு சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதனை ஏற்ற பசுமைத் தீர்ப்பாயம், நவம்பர் 30-ம் தேதி ஆய்வறிக்கையை சமர்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.இதையடுத்து, சீலிடப்பட்ட 42 கவர்களில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கையை ஐவர் குழுவினர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர்.
இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு குறித்த விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடங்கியது. தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.இதில் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழு பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது.ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கைக்கு முரணானது.ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பாமல் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு.ஸ்டெர்லைட் ஆலையை முடியதற்கு தமிழக அரசு கூறிய காரணம் ஏற்புடையதல்ல என்று தருண் அகர்வால் விசாரணை ஆணையம் தெரிவித்தது.தொடர்ந்து ஸ்டெர்லைட் தரப்பில் ஸ்டெர்லைட் வழக்கை அடிக்கடி ஒத்திவைக்க கூடாது என்று வாதாடப்பட்டது.இந்த விசாரணை அறிக்கை தொடர்பான ஆய்வறிக்கைக்கு தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இந்த வழக்கை டிசம்பர் 7ஆம் தேதி ஒத்தி வைத்தது பசுமைத்தீர்ப்பாயம்.
இந்நிலையில் விசாரணை தொடர்பாக ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அரசியல் காரணங்களுக்காகவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.ஆலையை மீண்டும் திறக்க சாதகமான அறிக்கையே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆலையை உடனடியாக திறக்க வலியுறுத்துவோம் என்று ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் தெரிவித்துள்ளார்.