மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!
பெண்களை மாலை 6 மணிக்கு பிறகு தடுப்பு காவலில் வைப்பது ஏன் என அண்ணாமலை மற்றும் தமிழிசை ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக கண்டனங்களை தெரிவித்து இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், காவல்துறை தரப்பில் டாஸ்மாக் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றே கூறப்பட்ட நிலையில், போராட்டம் நடத்திய பலரையும் காவல்துறை காலையிலே அதிரடியாக கைது செய்தது. பாஜக நிர்வாகி வினோஜ் பி.செல்வம், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதைப்போல, தற்போது, உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதற்காக, கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை சந்திப்பு அருகே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்களை காவல்துறை சென்னை அக்கரை தனியார் மண்டபத்தில் வைத்திருந்தனர். இதனையடுத்து, மண்டபத்தில் இருந்து தன்னை விடுவிக்கும்படி தமிழிசை கூற அதற்கு போலீசார் விடுவிக்க முடியாது என போலீசாருடன் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென அங்கிருந்த பெண் ஒருவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை காவல்துறை மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த தமிழிசை ஆவேசத்துடன் பேசினார். இது குறித்து பேசிய அவர் ” 6 மணிக்கு மேல் தடுப்பு காவலில் வைப்பது ஏன்? வேண்டுமென்றே எதற்காக இப்படி கொடுமைப்படுத்த தான் பாஜகவினரை விடுவிக்கவில்லை.
எனக்கு சட்டம் பற்றி தெரியும்..6 மணிக்கு மேலாகியும் எப்படி கைது செய்து ஒரே இடத்தில் வைத்திருப்பீர்கள்? சட்டப்படி நீங்கள் நடந்துகொள்கிறீர்களா? என்பது தான் என்னுடைய கேள்வி எனவும் ஆவேசத்துடன் தமிழிசை பேசினார். அவரை தொடர்ந்து அடுத்ததாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ” போராட்டம் நடத்தியவர்களை கைது செய்துவிட்டீர்கள் 6 மணி வரைக்கும் பெண்களை காவலில் வைத்திருக்க யார் உங்களுக்கு உரிமை கொடுத்தார்? 6 மணிக்கு முன்பே கைது செய்தவர்களை நீங்கள் விட்டிருக்கவேண்டும். நான் போலீசிற்கு மரியாதை கொடுக்கும் அரசியல்வாதி என்னுடைய பொறுமையை சோதிக்கவேண்டாம். நாங்கள் போராட்டம் செய்வதே டாஸ்மார்க் முற்றுகை போராட்டம் தான்.
அந்த டாஸ்மார்க்குகளை 5.30 மணிக்கே மூடிவிட்டார்கள். ஆனால், இன்னும் கைது செய்தவர்களை எதற்காக விடுவிக்கவில்லை?. எங்களை 6 மணிக்கு விடுதலை செய்திருக்கவேண்டும் ஆனால், 7 மணி வரை ஆகிவிட்டது. இன்றிரவு முதல் ஒரு போலீசாரையும் தூங்க விட மாட்டோம் 2026ம் ஆண்டு மே மாதம் வரை பாஜகவின் போராட்டம் தொடரும்” எனவும் ஆவேசத்துடன் அண்ணாமலை பேசிவிட்டு சென்றார்.