சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதிக்கு அழுத்தமா.? சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை.!

Savukku Shankar - GR Swaminadhan

சென்னை: சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தொடர்பு கொண்ட 2 உயர் அதிகாரமிக்க நபர்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை, திருச்சி, சேலம், சென்னை என பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால் சென்னை காவல் ஆணையர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தை பதிவு செய்து இருந்தார்.

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்திற்கு எதிராக அவரது தயார் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.  இந்த வழக்கு விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது நீதிபதி அமர்வில் நீதிபதி பிபி.பாலாஜி குண்டர் சட்டம் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியிருந்த வேளையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இரு நீதிபதிகள் வேறுவேறு தீர்ப்பு வழங்கி சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் , தன்னை 2 உயர் பொறுப்பில் இருக்கும் நபர்கள் தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்தாக கூறினார். ஆனால் நான் அவர்களுக்கு பணிந்து போகவில்லை என்றும் தீர்ப்பு கூறியபோது தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தொடர்பு கொண்ட 2 உயர்மட்ட அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இதனை பொதுநல வழக்காக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்