#Breaking : கோவை கார் வெடிப்பு : தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!
கோவை கார் வெடிவிபத்து, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் , டிஜிபி சைலேந்திர பாபு, தலைமை செயலர் இறையன்பு, உளவுத்துறை முக்கிய அதிகாரி, உள்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஜமேஷ் முபினுக்கு உதவி செய்த 5 பேரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ அதிகாரிகள் தனி தனி குழுக்களாக பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக தலைமைசெயலர் இறையன்பு மத்திய உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம், உளவுத்துறை அதிகாரி ஆகியோர் உடன் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை கார் வெடிவிபத்து தொடர்பாகவும், தமிழகத்தில் தற்போதைய சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.