தூத்துக்குடியில் பரபரப்பு… 11ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.!
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடியுள்னனர்.

ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெட்டியம்மாள்புரம் பகுதியில் பேருந்தை வழிமறித்து ஏறிய 3 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலை நடத்தியது தெரிய வந்துள்ளது.
தாக்குதலின்போது, பேருந்து பயணிகள் கூச்சலிட்டத்தால் அந்த மாணவனை தாக்கிவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடியுள்ளது. பின்னர், வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவரை மீட்டு காவலர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த மாணவனை வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசிய நிலையில், 17 வயதுடைய, 3 சிறார்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு நடந்துள்ளதால் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில், நன்றாக கபடி விளையாடும் என் மகனை சாதி பிரச்சனையில் வெட்டியதாக மாணவனின் தந்தை கூறியுள்ளார். அதேநேரம் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் குறித்து பேசிய நெல்லை சரக டிஐஜி மூர்த்தி, ‘முன்விரோதம், காதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இருக்கலாம்’ என கூறியுள்ளார்.