உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன்! சனாதன தேர்தல்.. ஓட்டு யாருக்குனு பார்க்கலாம் – அண்ணாமலை
சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆண்டாள் கோயிலில் 30 பிரசுரங்களை படித்துள்ளார், இதுவும் ஒரு வகையான சனாதன தர்மம் தான். இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அரவணைத்து செல்லக்கூடியது சனாதன தர்மம்.
எனவே, சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். கோயிலில் வழிபட்ட நான் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. நான் செய்யும் விவசாயத்தை பூசாரியை செய்ய சொல்ல முடியாது. பட்டியலினத்தவர், பெண்க உள்ளிட்டோர் சில கோயில்களில் பூசாரியாக இருப்பதை சனாதனம் ஏற்கிறது உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன், 2024 மற்றும் 2026 தேர்தல்களை சனாதன தேர்தல்களாக வைத்துக் கொள்ளலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் பிரச்சாரம் செய்யட்டும், பாஜக சனாதனத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும், மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என பார்க்கலாம் என கூறினார். சனாதன தர்மத்தை ஒழிப்போம் என வாக்குறுதி அளித்து தேர்தலை சந்திக்க தயாரா? குடியரசு தலைவர் தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு திமுகவினர் ஏன் வாக்களிக்கவில்லை? என நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காத சனாதனம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு அண்ணாமலை பதிலளித்தார்.
மேலும், பேசிய அண்ணாமலை, ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்தார். அவர் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக ஆதரவாக எழுதியிருப்பார். அப்பா புத்தகத்தையே முதலமைச்சர் முக ஸ்டாலின் படிப்பதில்லை என விமர்சித்தார்.
எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கட்டாயம், கண்டிப்பாக நடந்தே தீரும் என்றார். மேலும், செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருக்க வேண்டும் என முதல்வர் விரும்புவதில் உள்ள மர்மம் என்ன? மற்ற அமைச்சர்களுக்கு இதுபோல் பிரச்சனை வந்தால் முதல்வர் காப்பாற்றுவாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.