ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்ததாக வழக்கு!
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 7 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு என வழக்கு.
சென்னையில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யக்கோரி சென்னை மதுரவாயலை சேர்ந்த அசோக் சக்கரவர்த்தி என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.
மார்ச் முதல் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 7 ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகளுக்கான ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. பெரும்பாலான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குற்றச்சாட்டியுள்ளார்.
மே 23, 24 ஆகிய தேதிகளில் தகுதி போட்டிகள் நடக்க உள்ள நிலையில், ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் முறைகேடு என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, டிக்கெட்டு விவரங்களை சமர்பிக்கும்படி, பிசிசிஐ, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு உத்தரவிடக்கோரி கோரிக்கை வைத்துள்ளார். இதனால் அசோக் சக்கரவர்த்தி என்பவரது மனுவை விரைவில் விசாரிக்கிறது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.