#Breaking:அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு – உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 (வியாழக் கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள நிலையில்,அதிமுகவில் ஒற்றை தலைமை பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனி ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ள நிலையில்,ஒற்றை தலைமை கோரிக்கை காலத்தின் கட்டாயம் எனவும்,அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்றும்,தான் ஓபிஎஸ் பக்கமும் இல்லை, ஈபிஎஸ் பக்கமும் இல்லை எனவும் கட்சி தான் தனக்கு முக்கியம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பெஞ்சமின் என்பவர் மனுதாக்கல் செய்துள்ள நிலையில்,அதில் பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு தரக்கோரி தமிழக டிஜிபி அவர்களிடம் விண்ணப்பம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.இதனால்,இந்த வழக்கு வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.