மத்திய பட்ஜெட் ஓவர்., அடுத்தது மாநில பட்ஜெட்! இன்று முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!
தமிழக பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

சென்னை : மத்திய பட்ஜெட் 2025-2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு உள்ளிட்ட சில அறிவிப்புகள் பாராட்டப்பட்டாலும் தமிழகத்திற்கு என சிறப்பு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது.
வழக்கமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மாநிலங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில், மாநில பட்ஜெட்டானது 2ஆக பிரிக்கப்பட்டு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் என விவசாயதுறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த வருட முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 6 முதல் 11 வரையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இம்மாத இறுதியில் அல்லது மார்ச் மாத முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் என்னென்ன அறிவிப்புகள் அறிவிக்கப்படும் என்பது குறித்து இன்று ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பட்ஜெட் குறித்தும், மற்ற சில முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.