பாஜக கூட்டத்தில் அடுத்தடுத்த டிவிஸ்ட்., பேனர் மாற்றம்! நயினார் நாகேந்திரன் புகைப்படம்!
அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு பேனர் முதலில் NDA கூட்டணி என பதிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது மாற்றம் செய்யப்பட்டு பாஜக தலைவர்கள் மட்டும் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய தலைமை மூத்த தலைவருமான அமித்ஷாவின் சென்னை வருகை, அதற்கடுத்து காலையில் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் சந்திப்பு ஆகியவை நடைபெற்றது. இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரத்திக்கும் மேலாக நடைபெற்றது.
அதற்கு முன்னதாக நேற்று ஆடிட்டர் குருமூர்த்தியுடன், தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அறிவித்தது போல பிற்பகல் 2 மணிக்கு மாநிலத் தலைவருக்கான விருப்ப மனுக்கள் பாஜக தலைமை அலுவலகத்தில் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
அதனை பெறுவதற்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைமை அலுவலகம் வந்திருந்தார். புதிய பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும், அடுத்தடுத்த வரிசையில் எல்.முருகன், வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெயர்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் சென்னை தனியார் ஹோட்டலில் தங்கியிருக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று பிற்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக கூறப்பட்டது. அப்போது அங்கு வைக்கப்பட் செய்தியாளர் சந்திப்பு பேனரில் NDA கூட்டணி என குறிக்கப்பட்டு இருந்தது. அதனை அடுத்து தற்போது பேனர் மாற்றப்பட்டு அதில் பாஜக தலைவர்கள் புகைப்படம் மட்டுமே இடம் பெற்று இருந்தது. இந்த பேனரில் எல்.முருகன் அருகில் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதியம் 12 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது வரை அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நிகழவில்லை. பிற்பகல் 3.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அதில் NDA கூட்டணி குறித்து அறிவிப்பு இருக்காது என்றும், பாஜக மாநில தலைவர் உள்ளிட்ட கட்சி சார்ந்த தகவல்கள் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.