திருத்தணி முருகன் கோயிலில் 100 அடி நீள தவெக கொடி.. நிர்வாகிகள் மீது பாய்ந்தது வழக்கு.?
திருத்தணி முருகன் மலைக் கோயிலில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் 100 அடி நீளம் கொண்ட கட்சிக் கொடி ஏந்தி மாடவீதியில் விதிகள் மீறி ஊர்வலம் நடத்தினர்.
திருவள்ளூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ஒரு பக்கம், மாநாடுக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முதல் மாநாடு வெற்றி பெற கொடியை வைத்து பூஜை செய்வதற்காக திருத்தணி முருகன் மலைக் கோயிலில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் 100 அடி நீளம் கொண்ட கட்சிக் கொடி ஏந்தி மாடவீதியில் விதிகள் மீறி ஊர்வலம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து, திருக்கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை தடுத்து நிறுத்தி கோயில் வளாகத்தில் அரசியல் ஈடுபடக்கூடாது, இதுபோன்று பேரணியில் ஈடுபடும்போது காவல்துறையிடம் முன் அனுமதி பெற்று மேற்கொள்ள வேண்டும் என எச்சரித்து அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.
திருத்தணி முருகன் கோயிலில் த.வெ.க மாநாட்டு பேனரை கொண்டு வந்ததால் பரபரப்பு pic.twitter.com/qzhvPMSAZK
— sandeep (@sandeepsharp2) October 20, 2024
மறுபக்கம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அக்.27-ம் தேதி நடைபெறவுள்ள தவெக மாநாட்டில் கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள். முதியவர்கள் உள்ளிட்டோர் வர வேண்டாம் என அக்கட்சித் தலைவர் விஜய் இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும், அதனால் அவர்கள் குடும்ப உறுப்பினர் என்ற உரிமையில் அன்புடன் இதனைச் சொல்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.