“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!
மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில்வே வழித்தடத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி – மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக அண்மையில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சென்னை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் இந்த திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார். இதனை அடுத்து அதிமுக, பாஜக ஆளும் திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தனர்.
அதன் பிறகு அண்மையில், செய்தியாளர் சந்திப்பில் அதிக சத்தம் இருந்ததால், கேள்வி சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை என்றும், தூத்துக்குடி என்ற சொல் தனுஷ்கோடி என்றதால் மாற்றி பதில் கூறியதாகவும், தூத்துக்குடி – மதுரை ரயில்வே வழித்தட திட்டம் கைவிடப்படவில்லை என்று மத்திய அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த ரயில்வே வழித்தட விவகாரம் குறித்து இன்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் இன்று மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் கண்டுகளித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில், ” மதுரை -அருப்புக்கோட்டை – தூத்துக்குடி ரயில் வழித்தடம் என்ன நிலைமை என பத்திரிக்கையாளர் தெளிவாக மத்திய அமைச்சரிடம் கேட்டார். அதனை வேண்டாம் என்று தமிழக அரசு மறுத்ததாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். அது மிக் தவறான செய்தி. பேட்டி கொடுத்த ஒரு மணிநேரத்தில் நாங்கள் ரயில்வேத்துறை கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால், அதனை அவர்கள் 5 நாட்கள் திட்டமிட்டே தாமதப்படுத்தி அதன் பிறகு தான் உண்மையை கூறினார்கள்.
மத்திய ரயில்வேத்துறை தமிழ்நாட்டை முழுதாக வஞ்சிக்கிறது. மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி புதிய வழித்தடத்திற்காக கடந்த 6 ஆண்டுகளாக 5 முறை நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னையை நான் எழுப்பி இருக்கிறேன். எழுத்துபூர்வமாக இக்கோரிக்கையை கூறி இருக்கிறேன். அதற்கான நிதியை கொடுக்காமல் தாமதம் செய்வது மத்திய அரசு. இப்போதாவது நிதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். வருகிற பட்ஜெட்டில் இதற்கான நிதியை முழுதாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அமைச்சர் பேட்டி கொடுத்த உடன் தமிழக அரசுக்கு எதிராக அண்ணாமலை (பாஜக) போராட்டம் அறிவிக்கிறார். அதனை தொடர்ந்து அதிமுக போராட்டம் அறிவிக்கிறார்கள். ரயில்வே துறை பற்றி குறைந்தபட்ச உண்மை தெரிந்தால் கூட இதை செய்திருக்க மாட்டார்கள். இந்த போராட்ட அறிவிப்புகள் தமிழக அரசு மீதான கோபமாகவே இது வெளிப்டுகிறது. உண்மையாக தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதிக்கான கோபமாக இது தென்படவில்லை. அதிமுக அறிவித்த போராட்டமும் சரி, அண்ணாமலை அறிவித்த போராட்டமும் சரி இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். ” என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.