சிவகாசி வெடி விபத்து.. 10 பேர் பலி.! விசாரணை தீவிரம்…

Sivakasi Fire Accident

சிவகாசி செங்கலம்பட்டி கிராமத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரத்தில் உள்ள செங்கலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் சுதர்சன் ஃபயர் ஒர்க்ஸ் எனும் பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தமுள்ள 20 அறைகளில் 7 அறைகள் முற்றிலும் வெடித்து தரைமட்டமாகின.

இந்த கோர விபத்தில் இதுவரை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பெண்கள் உட்பட 7 பெண்கள் 3 ஆண்கள் என 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட எஸ்.பி பேட்டி :

விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வெடி விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த விருதுநகர் மாவட்ட எஸ்பி பெரோஸ் கான் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சரியான பயிற்சி கொடுக்காமல் வேலையாட்களை பணியமர்த்துவதே இம்மாதிரியான விபத்துகளுக்கு காரணம் என கூறினார்.

விபத்துக்கான காரணம் :

மேலும், ஒரு பட்டாசு ஆலையில், ஒரு தயாரிப்பு அறையில் 2 பேர் மட்டுமே இருக்க வேண்டும். அதனை தாண்டி ஆட்கள் இருக்க கூடாது. ஃபோர் மேன் எனப்படும் மேற்பார்வையாளர் கண்டிப்பாக ஆலையில் இருக்க வேண்டும். அவர் வேலைகளை கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் மீட்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இந்த விதிகளை மீறுவதால் தான் விபத்துக்கள் ஏற்படுகிறது.

பொதுவாக திருவிழா சமயத்தில், தேவை அதிகம் இருக்கும் சமயத்தில் மேற்கண்ட விதிமுறைகள் மீறப்படுகின்றன. அப்போது பயிற்சி இல்லாத பணியாளர்களை ஆலை நிர்வாகம் பணியமர்த்தி விடுகின்றனர் என கூறினார். மேலும் இந்த சம்பவத்தில் யார் பெயரில் பட்டாசு ஆலை உரிமம் இருக்கிறதோ அவர் மீதுவழக்கு பதியப்படும் என்றும், அடுத்து அந்த இடத்தில் மேற்பார்வையாளர் இல்லை என்றால் அவர் மீதும் வழக்கு பதியப்படும் என்றும் எஸ்பி பெரோஸ் கான் கூறினார்.

விபத்து ஏற்பட்ட செங்கலம்பட்டி சுதர்சன் பயர் ஒர்க்ஸ் பாட்டாசு ஆலை திருத்தங்கல் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 55) என்பவரது பெயரில் உள்ளது.

2 பேர் கைது :

இந்த வெடி விபத்து தொடர்பாக இதுவரை ஒப்பந்ததார் முத்து கிருஷ்ணன் மற்றும் போர் மேன் (மேற்பார்வையாளர்) சுரேஷ் ஆகியோரை சிவகாசி கிழக்கு பகுதி காவல்துறையினர் இன்று (மே 10) காலை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆலை உரிமையாளர் சரவணன் , ஆலை மேலாளர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

முதல்வர் இரங்கல் :

இந்த பாட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தனது வருத்தத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். அதில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (மே 9) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் (முதற்கட்ட தகவலின்படி) உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் என பதிவிட்டு இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்