ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்களை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்!
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் விவரங்கள் வெளியீடு.
இதுகுறித்து தமிழக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களுக்காக தொடர்புடைய சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல்களில் உள்ள 19.03.2021 அன்று வெளியிடப்பட்ட விவரங்களை அடிப்படையாக கொண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக தயாரித்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால் இன்று வெளியிடப்பட்டன என தெரிவித்துள்ளது.
அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களின் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆண்கள் 37,7,7524 பேரும், பெண்கள் 38,81,361 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 835 பேர் என மொத்தம் 76,59,720 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.