நாகை மாவட்டத்துக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை!
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காணோர் கலந்துகொண்டனர். தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்து வைத்தார். பின்னர் கொடி ஊர்வலம் நடைபெற்று கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா செப்.8ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 8ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு, திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படும். அன்றிரவு 8 மணிக்குப் பெரிய தேர்பவனி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை ஒட்டி நாகை மாவட்டத்துக்கு வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் வரும் 23ம் தேதியை பணி நாளாக அறிவித்துள்ளார் நாகை மாவட்ட ஆட்சியர். ஆக்.29 தேதி தொடங்கிய வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா வரும் 8-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.