டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய 88 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 08 முதல் 20ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. பின்னர் மீதமுள்ள 600கும் மேற்பட்டோரை தொடர்புகொள்ள முடியவில்லை என கூறியுள்ள சுகாதாரத்துறை, மீதமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து மருத்துவ சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். கொரோனா அபாயம் இருப்பதால் விரைவில் தாங்களாகவே முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வலியுறுத்திருந்தார்.
இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பிய 28 பேர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என மொத்தம் 88 பேர் திருச்சி அரசு மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்திருப்பதாகவும், முடிவு வந்த பின்னரே கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என முடிவு சொல்ல முடியுமா என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.