8,588 பேர் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை.. விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத ஒவ்வொரு மாணவரையும் தொடர்புகொண்டு வழிகாட்டுதல்கள் வழங்க பள்ளிகவித்துறை திட்டம்.
பிளஸ் 2 முடித்து 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பதால், உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 2021-2022-ம் கல்வியாண்டில் அரசு & உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு முடித்த 79,762 பேரில் 8,588 பேர் எவ்வித உயர்கல்வி படிப்புகளிலும் சேரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கென கடந்த 26 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட விவரங்களில் கூடுதலாக மாணவர்களின் EMIS எண், கல்வி மாவட்டம், மதிப்பெண், தொலைப்பேசி எண் உள்ளிட்ட விடுபட்ட தகவல்களை பள்ளிகளிலிருந்து பெற்று வழங்க வேண்டப்படுகிறது. எனவே. சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பணியினை முன்னுமை அடிப்படையில் மேற்கொண்டு விவரங்களை பெற்று உரிய படிவத்தில் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும். 8,588 பேருக்கும் தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை வழங்க ஏதுவாக விவரம் சேகரிக்கிறது பள்ளிக்கல்வித்துறை.