சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் 85 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னையில் கிண்டியில் உள்ள பிரபல ஓட்டலான ITC கிராண்ட் சோழா ஓட்டலில், ஊழியர்கள் உள்ளிட்ட 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலான ITC கிராண்ட் சோழா ஓட்டலில் 600 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில், 50 பேருக்கு பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த ஓட்டல் ஊழியர்கள் குடும்பத்தினருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், ஹாட்ஸ்பாட்டாக நட்சத்திர ஹோட்டல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓட்டலில் வருகிற 10-ஆம் தேதி வரை எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி அதிகாரிகள் நட்சத்திர ஓட்டல் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.