8 வழிச்சாலையும் , 6 வழிச்சாலையும் எங்களுக்கு தேவை இல்லை தொடங்கியது விவசாயிகள் எதிர்ப்பு…!!
8 வழிச்சாலையும் வேண்டாம், 6 வழிச்சாலையும் வேண்டாம் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கடந்த பிப். மாதம் 25ம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டமானது சுமுார் 277.3 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பது தான்.
இந்த சாலை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து சேலம் அருகே உள்ள அரியானூர் வரை இந்த சாலை போடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.1 கி.மீ. பகுதியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 123.9 கி.மீ. பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிமீ பகுதியிலும், தருமபுரி மாவட்டத்தில் 56 கிமீ. பகுதியிலும், சேலம் மாவட்த்தில் 36.3 கி.மீ. பகுதி என மொத்தம் 277.3 கி.மீ பகுதியில் இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைக்கும் பணிக்கு ஏராளமான விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.இதனால் இந்த சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.அரசும் காவல்துறையை வைத்து கடுமையான ஒடுக்குமுறையில் ஈடுபடடன.இந்த சூழலில் மக்கள் , கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தின.போராட்டத்தையும் ஒடுக்கும் விதமாக தமிழக அரசாங்கம் கைது நடவடிக்கைகளை தொடர்ந்தது.
இந்நிலையில் இத்திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளபோதும், மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை அமல்படுத்த பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தை முழுமையாக கைவிடக்கோரி 8 வழிச்சாலையும் வேண்டாம், 6 வழிச்சாலையும் வேண்டாம் என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று சேலம் அய்யோத்தியாப்பட்டிணம் பகுதியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, துணைத் தலைவர் பி.தங்கவேலு, பூபதி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி, ஒன்றிய துணைத் தலைவர் சத்தியா உள்ளிட்ட பலர் பங்கேற்று பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
DINASUVADU