எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது!
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தனர்.
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பது மட்டுமல்லாமல், படகுகளை பறிமுதல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தொடர் கதையாகி வரும் இந்த விவாகரத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தலைமன்னாருக்கு வடக்காக உள்ள நெடுந்தீவு கடற்பரப்பில், மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அதுத்துமீறி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்களிடம் காங்கேசன்துறை முகாமில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.