வேங்கைவயல் விவகாரம்.! டி.என்.ஏ பரிசோதனைக்கு ரத்தம் தர மறுக்கும் 8 பேர்.!
வேங்கைவயல் கிராம விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு 8 பேர் ரத்த மாதிரிகளை கொடுக்க மறுத்துள்ளனர். 3 பேர் ரத்த மாதிரிகளை கொடுத்துள்ளனர்.
வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பான விசரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 100 நாட்களை கடந்த விசாரணையில் பலரிடம் விசாரித்து இறுதியாக 11 பேர் இறுதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த 11 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து, அதனை கொண்டு மனிதக்கழிவு கலந்த குடிநீர் மாதிரிகளுடன் ஒப்பிட்டு குற்றவாளிகளை கண்டறிய, புதுக்கோட்டை மஹிளா நீதிமன்றத்தில் சிபிசிஐடி அனுமதி கேட்டு இருந்தது. டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நிலையில் இன்று 11 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அந்தந்த நபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அந்த 11 பேரில் காவலர், குடிநீர்த்தொட்டி ஆபரேட்டர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என 3 பேர் மட்டுமே ரத்த மாதிரிகைளை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கியுள்ளனர். மீதமுள்ள 8 பேர் ரத்த மாதிரிகளை வழங்க மறுத்துவிட்டனர்.
ரத்த மாதிரிகளை வழங்க மறுத்த 8 பேரும் வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும், சிபிசிஐடி போலீசார் தங்கள் மீது வழக்கை திசை திருப்ப பார்க்கிறார்கள், நாங்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள் எங்களையே சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். நாங்கள் தான் புகார் கொடுத்துள்ளோம் என அந்த 8 பேரும் தங்கள் ரத்த மாதிரிகளை வழங்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.