நாகையில் பழைய பணிமனை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி. 3 பேர் படுகாயம்….முதலமைச்சர் நிவாரணம் 7.5 லட்சம் அறிவிப்பு..!

Default Image

நாகை அருகே பொறையாரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இரவு நேரங்களில் பேரூந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள்  பணிமனைக்கு திரும்பும்போது இங்கு தூங்குவது வழக்கம். நேற்று இரவும் வேலை முடிந்து வழக்கம் போல தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் பணிமனையின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த 8 பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து காவல்துறை, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. படுகாயமடைந்தவர்களும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது. அதில் மேலும் பல பணியாளர்கள் சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. மேற்கூரை இடிந்து விழுந்த கட்டடம் மிகவும் பழைமையானது எனக் கூறப்படுகிறது.

 இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டட இடிபாடுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.7.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, தகுதியின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்