விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிறைவு.. மாலை 5 மணி நிலவரப்படி 77.3% வாக்குகள் பதிவு.!
விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இப்பொழுது, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வமுடன் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.84 லட்சம் மாலை 5 மணி நிலவரப்படி பேர் வாக்களித்துள்ளனர்.
276 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77.73% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, ஆண் வாக்காளர்கள் 89,045 பேர், பெண் வாக்காளர்கள் 95,207 பேர் என மொத்தம் 1,84,255 பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்கு பதிவின் முழுமையான நிலவரம் இன்று இரவு அல்லது நாளை காலை வெளியாகும். ஜூலை 13-ஆம் தேதி சனிக்கிழமை அன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.
அதன்படி, பாஜக தலைமையிலான NDA கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுகிறார். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. இதனால் விக்கிரவாண்டியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.