ஸ்டெர்லைட் ஆலையை வாங்க முன்வந்துள்ள 7 நிறுவனங்கள்..! – வேதாந்தா
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தகவல் அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால்,தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர். அந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கேட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதிக்காததால், ஆலையை விற்கப்போவதாக வேதாந்தா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதனையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தகவல் அளித்துள்ளார்.