“7.5% இடஒதுக்கீடு தரக்கூடாது” – கடிதம் எழுதிய பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளர்.. எல்.முருகன் விளக்கம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என ஆளுநருக்கு தமிழக பாஜக கல்வி பிரிவு செயலாளர் நந்தகுமார் கடிதம் எழுதியதற்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.
அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ – மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் செப்டம்பர் 16-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டுமே, அது சட்டமாக நடைமுறைப் படுத்தப்படும் என்பதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள நிலையில், இதுகுறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் உட்பட அமைச்சர்கள் பலர் சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்தித்து பேசினர். மேலும், எதிர்க்கட்சிகள், கையெழுத்திடாமல் ஆளுநர் தொடர்ந்து தாமதப் படுத்தி வருகிறார் எனவும், மத்திய பாஜக-வின் அழுத்தம் காரணமாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதம் செய்கிறார் என்று எதிர்கட்சிகள் உட்பட பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பாஜக தலைவர் எல்.முருகன், ஆளுநர் காலதாமதம் செய்யாமல் உடனே 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும், இதற்கு முற்றிலும் பாஜக ஆதரவாக இருக்கும் என தெரிவித்தார். இந்நிலையில், 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என ஆளுநருக்கு தமிழக பாஜக கல்வி பிரிவு செயலாளர் நந்தகுமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த விவகாரம், பாஜகவில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மாநில செயலாளர் என்ற முறையில் கடிதம் எழுதினார் என கூறிய அவர், ஆளுநருக்கு எழுதிய கடிதத்திற்கும், பாஜக கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும், 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் தாமதிக்காமல் விரைவில் ஒப்புதல் அளிக்குமாறும் தெரிவித்துள்ளார்.