7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதா… விரைவில் நடவடிக்கை என ஆளுநர் உறுதி…
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஐந்து மூத்த அமைச்சர்கள் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ – மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழக இது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள நிலையில், பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகிய 5 பேர் நேற்று மதியம் 12 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.
இது தொடர்பாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும், மாணவ, மாணவிகள் கலந்தாய்வுக்கு செல்கிற நிலையில் விரைந்து ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். அவரும், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். கண்டிப்பாக நல்ல முடிவை அறிவிப்பேன் என்ற தகவலை எங்களிடம் அவர் தெரிவித்தார். வழக்கமாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றும் எல்லா மசோதாக்களுக்கும் அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டியது அவரது கடமை. தற்போது பரிசீலனையில் மசோதா இருக்கிறது. நாம் அவரை கட்டாயப்படுத்த முடியாது. அதனால் கவர்னரை நேரடியாக பார்த்து, தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம். எனவே, உள்ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் மட்டும்தான் நம்முடைய மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பை படிக்க முடியும் என்ற கருத்தை நாங்கள் சொல்லி இருக்கிறோம். தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றால், 7.5 சதவீத இடஒதுக்கீடு வந்தால் மட்டுமே நடத்த முடியும் என்றும் சொல்லிவிட்டோம். என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.