தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு! இதை வாய்ப்பாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் – வாசன்
தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கை வாய்ப்பாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் 6-ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தமிழ்நாடு அரசு அறிவித்த 5-ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மார்ச் 25 முதல் ஜுன் 30 வரை இடைப்பட்ட காலத்தில் அரசின் நடவடிக்கைகளால் தமிழாக அரசு கொரோனா பரவுதலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உரிய பல முயற்சிகளை மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அவர்களின் சிறந்த பணிகளோடும் இணைந்து மக்கள் ஆதரவோடு மேற்கொண்டது.
இருப்பினும் கொரோனா தொற்று பரவுதல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த நிலை நீடிக்கிறது. உலகளவில் வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவை கட்டுப்படுத்த போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் தமிழக மக்கள் நலன் கருதி கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, பரவலை தடுக்க, படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்க, தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கை தமிழக அரசு கட்டுப்பாட்டோடும், அதே நேரத்தில் சில தளர்வுகளோடும், ஜுலை 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவித்து இருக்கிறது.
எனவே, பொதுமக்களாகிய நாம் 6-ம் கட்ட ஊரடங்கை ஒரு உறுதியான வாய்ப்பாக பயன்படுத்தி கட்டுக்கோப்பாக செயல்பட்டு, அரசு கோட்பாடுகளை முழுமையாக கடைபிடித்து கொரோனாவை படிப்படியாக விரைவில் கட்டுக்குள் கொண்டுவர வழிவகுப்போம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.