தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.!
தமிழகத்தில் இன்று மேலும் 1,438 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 6 வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1116 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 19,826 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாசகர் கூறியுள்ளார்.
மேலும் இன்று 861 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 15,692 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5,60,673 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் 12,697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று பாதிக்கப்பட்ட 1,1438 பேரில் 33 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்த எந்த தகவலையும் தமிழக அரசு மறைக்கவில்லை என்றும் வெளிப்படைத்தன்மையும் தகவல்கள் பகிரப்படுகின்றன என கூறியுள்ளார். தமிழக அரசின் கொரோனா செய்திக்குறிப்பை ஐசிஎம்ஆர் பாராட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.