தூத்துக்குடி வாலிபரை கொல்ல முயற்சி 6 பேருக்கு வலை வீச்சி.
தூத்துக்குடி அண்ணா நகர் 7–வது தெருவில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. அந்த கும்பல் திடீரென அவரை தடுத்து நிறுத்தி அரிவாளால் அவரை வெட்டியது. இதில் சுதாரித்துக் கொண்ட அவர் லேசான காயத்துடன் மோட்டார் சைக்கிளை விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்
அந்த கும்பல் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்கை அரிவாளால் வெட்டியதுடன் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தனர். இதில் அந்த மோட்டார் சைக்கிள் கொளுந்து விட்டு எரிந்தது. அதைப்பார்த்த அந்த பகுதியில் இருந்த மக்கள் அந்த இடத்தில் இருந்து அலறியடித்து உயிர் தப்பிக்க ஓடினர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் 6 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். அப்போது ஒருவர் மட்டும் காயத்துடன் போலீசாரிடம் சிக்கினார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அண்ணா நகரை சேர்ந்த பாஸ்கர் என்பது தெரிய வந்தது. அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிடிபட்ட பாஸ்கர் வாலிபரை வெட்டிய கும்பலை சேர்ந்தவரா? என்றும், மோட்டார் சைக்கிளை விட்டு தப்பி ஓடிய வாலிபர் யார்? அவரை எதற்காக அந்த 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொல்ல முயன்றனர்? என்று போலீசார் பல கோணங்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்
.
.