நீரோடையில் விழுந்து பெண் யானை பலி: தமிழக-ஆந்திர வனத்துறை விசாரணை..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர எல்லையில் உள்ளது. ஆந்திர வனச்சரகத்திற்குட்பட்ட கவுண்டன்யா யானைகள் சரணாலயம் மிக அருகிலேயே இருக்கிறது.
இங்கு இருந்து குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டப்பல்லி உள்ளிட்ட கிராமங்களுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்யும்.
மோர்தானா நீரோடையில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்லும். நேற்று ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள் மோர்தானா நீரோடையில், யானை இறந்து கிடந்ததை பார்த்தனர்.
இதுகுறித்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஜி.பி.எஸ். மூலம் ஆய்வு செய்ததில் யானை இறந்துகிடந்த பகுதி தமிழக-ஆந்திர வனப்பகுதி எல்லையில் இருந்தது.
இதனால், ஆந்திர வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எல்லை பிரச்சினை காரணமாக, யானை உடலை அகற்றுவது யார்? என்பதில் முரண்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, வேலூர் மாவட்ட வன அலுவலர் முருகன், குடியாத்தம் வனச்சரக அலுவலர் சங்கரய்யா தலைமையில் தமிழக வனத்துறையினர் மற்றும் ஆந்திர வனத்துறையினர் இன்று காலை மோர்தானா நீரோடை பகுதிக்கு வந்தனர்.
யானை உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. சுமார் 40 வயது இருக்கும். ஒரு வாரத்திற்கு முன்பே தண்ணீர் குடிக்க மோர்தானா நீரோடைக்கு வந்துள்ளது.
அப்போது தவறி விழுந்து நீரோடையில் இறந்துள்ளது என தமிழக-ஆந்திர வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், யானையின் அழுகிய உடலில் இருந்து பெரிய புழுக்கள், சதை துணுக்குகள் நீரோடையில் கலந்து மோர்தானா அணைக்கு செல்கிறது.
இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீரோடையில் கிடந்த யானையின் உடலை தமிழக- ஆந்திர வனத்துறையினர் அகற்றினர். மேலும், யானை இறப்பு குறித்து இருமாநில வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.