“6,31,127 புதிய வாக்காளர்கள்”தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு தகவல்..!!
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 31 ஆயிரத்து 127 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு தெரிவித்துள்ளார்.
1.01.2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல்சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டப்பட்டது. இதன்படி தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பு, நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை செய்ய செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரண்டு மாத கால அவகாசத்தை ஆணையம் அளித்துள்ளது. இதன்படி செப்டம்பர் 9 சிறப்பு முகாம் நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக நேற்று (23-ம்தேதி ) சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் உள்ள 67ஆயிரத்து 644 வாக்கு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் பெயர் உள்ளதா என்று சரிபார்த்துக் கொண்டனர். மேலும் பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திக்கு விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், செப்டம்பர் 1 முதல் 23-ம்தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க (படிவம் 6) மொத்தம் 6 லட்சத்து 31 ஆயிரத்து 127பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 933 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 115 பேரும் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்கம் செய்ய ( படிவம் 7 ) 51 ஆயிரத்து 233 பேரும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள ( படிவம் 8 ) 89 ஆயிரத்து 194 பேரும், முகவரி மாற்றம் செய்ய ( படி 8 ஏ ) 53 ஆயிரத்து 633 பேர் என மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரத்து 260 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து வருகிற அக்டோபர் 31-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்க்கொள்ள காலஅவகாசம் உள்ளது. வரும் அக்டோபர் 7 மற்றும் 14-ம்தேதி அன்று சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
DINASUVADU