60 கேமிராக்கள்! 165 கி.மீ! ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் சிக்கிய பலே திருடன்!
ராயபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவமானது, பல சிசிடிவி கேமிராக்கள், பல கிமீ தூரம் கடந்து புதுச்சேரி வரை துரத்தியும், தப்பித்த அந்த திருடன், கடைசியில் புதுச்சேரி போலீசிடமே பிடிபட்டு ராயப்பேட்டை கொண்டுவரப்பட்டதன் பின்னனி என்னவென்று பார்ப்போம்.
ராயபேட்டையில் ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, 8 சவரன் நகை கொள்ளை அடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் தப்பித்து விட்டு சென்றுவிட்டான்.
இது தொடர்பாக போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் போலீசார், அந்த பகுதி சுற்று வட்டார பகுதி சிசிடிவி கேமிராக்களில் காட்சிகளை ஆராய்ந்த்து வந்தனர், அதில் அந்த திருடன் ஹெல்மெட் அணிந்து கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பித்தது தெரிந்தது.
அந்த சிசிடிவி காட்சிகள் ஜெமினி பாலம், கோடம்பாக்கம், வடபழனி, செங்கல்பட்டு என நீண்டுகொண்டே போக, புதுச்சேரி செல்லும் வழியில் ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்று தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளான்.
அப்படியே திண்டிவனம் சென்று அந்த வழியாக புதுச்சேரி சென்றுள்ளான் அந்த திருடன். இதுகுறித்து புதுசேரி காவல்நிலையத்தில், அந்த திருடன் பற்றி தமிழக போலீசார் விசாரித்துவிட்டு திருடன் கிடைக்காமல் சென்றுவிட்டனர்.
பிறகு இன்னொரு நாள், புதுசேரியில் ஒரு பெண்ணிடம் அதே திருடன் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டபோது அங்குள்ள மக்களிடம் சிக்கி பிறகு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
அவனது வண்டி மற்றும் ஹெல்மெட் ஆராய்ந்தபோது சென்னை ராயப்பேட்டையில் திருடிய அதே நபர்தான் என்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் புதுசேரி போலீசார் கண்டுபிடித்தனர். பிறகு ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு திருடன் ராயப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கபட்டான்.
இந்த திருடன் பெயர் ஜான்சன் எனவும், கொல்காத்தவை பூர்வீகமாக கொணடவன், என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த திருடனிடம் இருந்து 8 சவரன் நகையும், இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.