வசீம் அக்ரம் கொலை வழக்கில் சரணடைந்த 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் சரணடைந்த 6 பேர் வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்.
கடந்த 26ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த இம்தியாஸ் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கஞ்சா இருப்பதாகக் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, 9 கிலோ கஞ்சா, மூன்று கத்திகள், 10 கைபேசிகள் ஆகியவற்றைக் கைப்பற்றி, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா குறித்த தகவலை மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம் தான் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக இம்தியாஸ் கூறியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி வசீம் அக்ரமை வழிமறித்து, மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டியதால், அதே இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் சரணடைந்த 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தஞ்சை நீதிமன்றத்தில் சரணடைந்த 6 பேரை அழைத்து வந்து வாணியம்பாடி நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தினர். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார், அஜய், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன், செல்வகுமார் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.