ஸ்டெர்லைட் ஆலை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 6 பேரை கைது செய்து வழக்கு பதிவு ..!
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போராட்டக்குழுவைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர் .
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வருவோரில் சிலர் வியாழக்கிழமை மடத்தூர் விலக்குப் பகுதி வழியாக ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற ஆலையின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு பேருந்தில் முன்பக்க கண்ணாடியும், ஒரு வேனின் பக்கவாட்டு கண்ணாடியும் உடைந்தன.
மேலும், இந்தச் சம்பவத்தின்போது, ஒரு குழந்தை உள்ளிட்ட 3 பெண்களும், பேருந்து ஓட்டுநர் சீனிவாசன் உள்ளிட்ட இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து, ஓட்டுநர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸார் போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்கள் மீது சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் கூடுதல், வழிமறித்து தாக்குதல், அவதூறாக பேசுதல், பெண்களை மிரட்டுதல், கல்வீசி தாக்கி பேருந்து கண்ணாடியை உடைத்தல் என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, போராட்டக்குழுவைச் சேர்ந்த தமிழ்செல்வன், செல்வக்குமார், பிரபு, மூர்த்தி, செல்வம், வாழவெட்டி ஆகிய 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.