2 லட்சம் விவசாயிகள் பலன்பெற மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி..!
சட்டப்பேரவையில்2024-25-ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர்” வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திட தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பயிர் வகைகள், கொப்பரை தேங்காய் ஆகியவையும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செயல்படுவதால் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு கரும்பிற்கு ஒரு மெட்ரிக் டன் ஊக்கத்தொகையாக 195 ரூபாய் விதம் 260 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திட ஏதுவாக உழவர் சந்தைகள், மின்னணு சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வேளாண் பெருங்குடி மக்களின் விளைபொருளுக்கு நல்ல விலை அளிக்கப்பட்டு அவர்களுக்கான வாய்ப்புகள் மேன்மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
விளைப்பொருட்களின் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை தடுக்க தமிழக அரசு புதிய குளிரிடப்பட்ட கிடங்குகள், தானிய சேமிப்பு கிடங்குகள் போன்ற வசதிகளை தொடர்ந்து செய்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர் ஆண்டுதோறும் ஏற்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு இயற்கை பேரிடரிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட இதுவரை 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை ரூ.4,436 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 2482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ. 6.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என தெரிவித்தார்.