200 நாட்களில் 595 கொலைகள்… இபிஎஸ் வெளியிட்ட ‘திடுக்’ ரிப்போர்ட்.!

edappadi palanisamy

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம், நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை சம்பவம், மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை சம்பவம் என தமிழகத்தில் கடந்த ஒருசில மாதங்களில் அரசியல் பிரமுகரின் கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதே போல, கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை , மதுரை மூதாட்டிகள் கொலை என பல்வேறு கொலை சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன.

இவ்வாறான கொலை சம்பவங்கள் குறித்து ஆளும் திமுகவின் சட்ட ஒழுங்கை பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  விமர்சித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியீட்டு கூறியதாவது “ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி” என்று பாடினார் புரட்சித் தலைவர். ‘புரட்சித்தலைவரின் ரசிகன் நான் என்றும், அவரது படங்களை பார்த்தே வளர்ந்தவன் நான்’ என்றும் தேவைக்கேற்றார்போல், சந்தர்ப்பத்திற்கேற்றார்போல் சொல்லக்கூடிய இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தராமல், அவர்களை சிரமத்திற்குள்ளாக்கி தனது நிர்வாகத் திறமையின்மையை நாள்தோறும் வெளிக்காட்டி வருகிறார்.

விடியா திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 80 கொலைகளும், பிப்ரவரி மாதம் 64 கொலைகளும், மார்ச் மாதம் 53 கொலைகளும், ஏப்ரல் மாதம் 76 கொலைகளும், மே மாதம் 130 கொலைகளும்,ஜூன் மாதம் 104 கொலைகளும்,  ஜூலை 17-ஆம் தேதி வரை 88 கொலைகளும் என, மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்’ என்ற இருமாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கையில் அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் தொடர்ந்து காவல் துறையை தங்களின் சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்துவார்களேயானால், ‘அரசியல் பிழைத்தோர்க்கு, அறம் கூற்றாகும்’ என்பதை நினைவூட்டுகிறேன்” என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்