தேர்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு
தேர்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிமுக ஆட்சியில் நகை கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் வரை முறைகேடாக நகைகடன் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குடும்பத்தில் ஒருவர் நகை கடன் பெற்றால் தான் தள்ளுபடி செய்யப்படும் என சொல்லவில்லை. தில்லுமுல்லு செய்து வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை திமுக அரசு அளித்ததாக கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வண்ணம் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு நகை கடன் வழங்கியதில் என்னென்ன முறைகேடுகள் குளறுபடிகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதெல்லாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. அதை மறைப்பதற்காக பொருத்தமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை அரசு மீது வாரி இறைத்து இருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் அடிப்படையான உண்மைகளை மறைத்து பேசுகிறார்.
திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த 505 வாக்குறுதிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றும். தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்படாத பல நல்ல திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றுவோம். இதனை தமிழக மக்கள் உறுதியாக நம்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் திமுக அரசு பொறுப்பேற்ற சில மணித்துளிலேயே தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெறும் விதமாக மிக முக்கியமான 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்திட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.