ஏழைகளுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் – மு.க ஸ்டாலின்
ஏழை மக்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மேலும் 2 வாரத்திற்கு அதாவது மே 17 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டி நெறிமுறை கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசு ஊரடங்கை மதித்து நடக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அனைவர்க்கும் ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் குறை சொல்ல முடியாத அரசாக இருக்க வேண்டும் என விரும்புவதால் சொல்கிறேன் என முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். அதில், ஏழை மக்களுக்கு ரூ.5000 உதவித் தொகையும்,கொரோனா தடுப்பில் களப்பணியாற்றும் அனைத்துத் துறையினருக்கும் சிறப்பு ஊதியமும் வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனா பேரழிவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை, அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரணம் உதவிகள் போதாது என்று தெரிவித்துள்ளார்.
ஏழை மக்களுக்கு ரூ.5000 உதவித் தொகையும், #Corona தடுப்பில் களப்பணியாற்றும்அனைத்துத் துறையினருக்கும் சிறப்பு ஊதியமும் வழங்கிட வேண்டும்.
மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும்.
ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை; அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. pic.twitter.com/2sFi6WmA4d
— M.K.Stalin (@mkstalin) May 2, 2020