ஹைதராபாத்தில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பப்பட்ட கருப்பு பூஞ்சை தொற்றை குணப்படுத்தும் 5000 மருந்து குப்பிகள்!
கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தக் கூடிய 5000 குப்பி மருந்துகள் ஹைதராபாத்தில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை தற்பொழுது சென்னை வந்தடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கருப்பு பூஞ்சை தொற்று நோய் தற்போது அனைவரையும் மிரட்டி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையின் போது அளிக்கப்படக் கூடிய ஸ்டீராய்டு மருந்துகள் காரணமாக உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த கருப்பு பூஞ்சை எளிதாக தாக்குகிறது என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தற்பொழுது கொரோனாவின் பாதிப்பும் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும், தமிழகத்திற்கு தேவையான கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தக் கூடிய 5000 மருந்து குப்பிகளை வாங்கவேண்டும் என தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து தற்பொழுது ஹைதராபாத்தில் இருந்து கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தக்கூடிய 5000 மருந்து குப்பிகள் தற்பொழுது சென்னை வந்தடைந்துள்ளது.