நாளொன்றுக்கு 500 டோக்கன் வழங்கத்திட்டம் -உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில் மனு
மதுக்கடைகளில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு டாஸ்மாக் இயங்க அனுமதிகொடுத்ததன் மூலம் தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனையின் பேரில் இயங்க அனுமதி கொடுத்தது.
ஆனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபான கடைகளை மூடவும், ஆன்லைன் மூலம் மட்டும் மது விற்பனை செய்யலாம் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலமாகவும் மது விற்பனை நடத்தக்கூடாது என்று வழக்குகள் தொடரப்பட்டது.இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.இந்நிலையில் மதுக்கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் பதில் மனு தாக்கம் செய்யப்பட்டுள்ளது.மேலும் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.