அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு… எத்தனையாயிரம் காளைகள்.? எத்தனையாயிரம் வீரர்கள்.?
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் திருவிழா போல நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உள்ளூர் , வெளியூர் முதல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் மதுரைக்கு வருவர்.
அறிவிப்பு :
லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வந்தாலும் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பது சந்தேகமே. ஏனென்றால் பாரம்பரியமாக ஆண்டுதோறும் ஊருக்குள் குறுகிய இடத்தில் நடைபெறுவதால் முக்கிய விஐபிகளுக்கு மட்டுமே கேலரி அமைக்கப்படும். அது போக மீதம் உள்ளவர்களுக்கு போதுமான இடவசதி இருக்காது. அதனால் கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடு.? கலெக்டரிடம் புகார் அளித்த மாடுபிடி வீரர்.!
5 ஆயிரம் பார்வையாளர்கள் :
அதன்படி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் 67 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானமானது 44 கோடி ரூபாய் செலவீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 5 ஆயிரம் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை காணும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. தரை தளம், முதல்தளம் , இரண்டாம் தளம் என 3 தளங்கள் கொண்டு இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
3 தளம் :
16,921 சதுரஅடி கொண்ட தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான இடமும், காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவிக் கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், தற்காலிக விற்பனைக் கூடம், பொருட்கள் பாதுகாப்புப் பெட்டகம், தங்கும் அறைகள் உள்ளன. முதல் தளமானது 9,020 சதுர அடி கொண்டதாகவும், இரண்டாவது தளமானது 1,140 சதுர அடி கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
5 திறக்கும் நேரம் :
இந்த பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக ” கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை திறந்து வைக்க நாளை காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வரவுள்ளார். நாளை காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு மைதானம் திறந்துவைக்கப்பட உள்ளது. விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.
9,312 – 3,669 :
இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளானது நாளை (ஜனவரி 24) தொடங்கி ஜனவரி 28 வரையில் 5 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க கடந்த ஜனவரி 19 முதல் 20 வரையில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகு மொத்தமாக 9,312 ஜல்லிக்கட்டு காளைகளும், 3669 மாடுபிடி வீரர்களும் madurai.nic.in என்ற தளத்தில் பதிவு செய்தனர். அதில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும், 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
5 நாள் ஜல்லிக்கட்டு .?
தொடர்ந்து 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்ற அறிவுக்கு ஜல்லிக்கட்டு பேரவைகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்ததாகவும், 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றால் ஜல்லிக்கட்டு மாண்பு , புகழ் குறைய வாய்ப்புள்ளது என கூறப்படதாக தகவல் வெளியாகியது. அதன் பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தற்போது 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என கூறப்படுகிறது. எதுவாயினும் அதிகாரபூர்வமாக அடுத்தடுத்த நாள் ஜல்லிக்கட்டு போட்டிகள் பற்றி நாளை தெரிந்துவிடும்.