50 ஆயிரம் இடங்களில்…இன்று 25-வது கொரோனா தடுப்பூசி முகாம்!
கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி,கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை வார இறுதி நாட்களில் தமிழக அரசு நடத்தி வருகிறது.
தடுப்பூசி செலுத்தியவர்கள்:
அந்த வகையில்,இதுவரை 24 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.அதன்படி,இதுவரை 9 கோடியே 91 லட்சத்து 7 ஆயிரத்து 546 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.முதல் தவணை தடுப்பூசி போடாமல் 46 லட்சத்து 67 ஆயிரத்து 999 பேர் உள்ளதாகவும்,முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு 2-வது தவணை தடுப்பூசி போடாமல் ஒரு கோடியே 34 லட்சத்து 32 ஆயிரத்து 862 பேர் இருப்பதாகவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 25-வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. மேலும்,வீடுகளுக்கு அருகிலேயே முகாம்கள் நடத்தப்படுவதால் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.