நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள்.. தமிழகத்தில் மூன்று – மத்திய அரசு அனுமதி!
நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 3 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 8,195 இளங்கலை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 1,07,658-ஐ தாண்டியுள்ளது. இந்த 50 புதிய மருத்துவ கல்லூரிகளில் (30 அரசு மற்றும் 20 தனியார்) கல்லூரிகளாகும். இதன்மூலம் தற்போது நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, தெலுங்கானா, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஒடிசா, நாகாலாந்து, மகாராஷ்டிரா, அசாம், கர்நாடகா, குஜராத், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானாவுக்கு மட்டும் 12 புதிய மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, தமிழகத்தில் 3 தனியார் மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பிஎஸ்ஜி அறக்கட்டளை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி அறக்கட்டளை சார்பில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், ஈரோடு வாய்க்கால்மேட்டில் நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அறக்கட்டளை சார்பில் மருத்துவ கல்லூரி அமைகிறது. இதன் மூலம் இவ்வாண்டு தலா 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் 3 தனியார் மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்.எம்.சி) இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் ஆய்வுகளின் போது, பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை எனக் கூறி நாடு முழுவதும் உள்ள 38 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் கடந்த இரண்டரை மாதங்களில் திரும்பப் பெறப்பட்டது. மேலும், 102 மருத்துவக் கல்லூரிகளுக்குக் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதில், 38 மருத்துவக் கல்லூரிகளில், 24 என்எம்சியிடம் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக முறையிட்டுள்ளன, 6 மருத்துவ கல்லூரிகள் சுகாதார அமைச்சரை அணுகியுள்ளன. அங்கீகாரத்தை இழந்த கல்லூரிகள் ஒருமுறை என்எம்சியிடம் முறையிடவும், பின்னர் குறைபாடுகளை சரிசெய்த பிறகு சுகாதார அமைச்சகத்திடம் முறையிடவும் அனுமதிக்கப்படுகிறது.
கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு பின்பற்றவில்லை என்றும், சிசிடிவி கேமராக்கள், ஆதார் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பட்டியல்கள் தொடர்பான பல குறைபாடுகள், கமிஷனின் யுஜி போர்டு நடத்திய ஆய்வுகளின் போது கவனிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
2014-ம் ஆண்டு முதல் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்து தற்போது 654 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் பிப்ரவரியில் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
மேலும், 2014க்கு முன் 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 94 சதவீதம் அதிகரித்து, தற்போது 99,763 ஆகவும், முதுகலை பட்டப்படிப்பு இடங்களின் எண்ணிக்கை 107 சதவீதம் அதிகரித்து, 2014க்கு முன் 31,185 ஆக இருந்த நிலையில் இப்போது 64,559 ஆகவும் அதிகரித்துள்ளது. நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையையும், அதைத் தொடர்ந்து, எம்பிபிஎஸ் இடங்களையும் அதிகரித்துள்ளது.