பெங்களூரிலிருந்து கடத்தப்பட்ட 5 வயது பெண் குழந்தை – கன்னியாகுமரியில் போலீஸாரால் மீட்பு!
பெங்களூரிலிருந்து கடத்தப்பட்ட 5 வயது பெண் குழந்தை கன்னியாகுமரியில் போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள வெள்ளையம்பலத்தை சேர்ந்த ஜோஸப் ஜான் மற்றும் அவரது மனைவி எஸ்தர் ஆகிய இருவரும் பெங்களூரில் இருந்து ஐந்து வயது பெண் குழந்தையை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடத்தி வந்துள்ளனர். குழந்தையை வைத்துக்கொண்டு கையில் மற்றொரு சிறுவனுடன் இவர்கள் இருவரும் சுற்றி திரியும் பொழுது அப்பெண் குழந்தை அழுகையை நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்ததால் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்கள் இருவரின் மேலும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்துள்ளனர். இது குறித்து அவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்த பொழுது அவர்கள் இருவருமே தங்கள் குழந்தை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களின் முரணான பதிலால் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து பெண் குழந்தையை பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியை சேர்ந்த கார்த்திஸ்வரி என்பவரது மகள் எனவும் தனது பெயர் லோகிதா எனவும் சிறுமி தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போன சிறுமி குறித்து ஏதேனும் புகார்கள் உள்ளதா என விசாரித்த பொழுது பெங்களூரில் சிறுமியின் பெற்றோர் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பெங்களூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசாருடன் இணைந்து சிறுமியின் தாயாரும் தற்பொழுது கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இவர்களிடம் விசாரணை நடத்தி குழந்தையை ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.